கறுப்புப்பணத்தை ஒழிக்கிறோம் என்ற பேரில், 3 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் அமித்ஷா தலைமையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, ”இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்தார் மோடி.
அந்த அறிவிப்புக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே, 3 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிநாட்டில் அச்சிட்டு அமித்ஷா தலைமையில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், இந்திய அரசு அச்சடிக்க வேண்டிய பணத்தை வெளிநாடுகளில் அச்சடித்து இந்திய இராணுவத்தின் உதவியுடன் அமித்ஷா கொண்டு வந்துள்ளார். அப்படி கொண்டுவந்த பல கோடி ரூபாய் பணத்தை இந்நாட்டில் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளிடம், அவர்களிடம் இருந்த கருப்பணத்தை பெற்றுக்கொண்டு, வெளிநாட்டில் அச்சிடப்பட்ட பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தத் தகவல், இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒருவர் பேசிய வீடியோவின் மூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதனை ஒளிப்பரப்ப முயன்ற ஊடகங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அச்சடிக்கப்பட்ட கறுப்புப் பணத்தை இந்தியாவில் பரவலாக்கி, அதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாயில் 15-ல் இருந்து 40 சதவீதம் கமிஷனாக அமித்ஷாவின் குழு பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, ரிசர்வ் வங்கி அங்கீகரிப்பதற்கு முன்பாக இந்தியாவில் அச்சடிக்கப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டில் அச்சடித்துள்ளனர். அதற்காக அவர்கள் பல்வேறு குளறுபடிகளைச் செய்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக அந்த ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் இருந்துள்ளார். ஆனால் கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையின் போது உர்ஜித் பட்டேல் கவர்னராக இருந்தார். இதில் என்ன அதிர்ச்சி தகவல் என்றால், முன்பே அச்சிடப்பட்ட கறுப்புப் பணத்தில் உர்ஜித் பட்டேல் கையெழுத்து இருந்துள்ளது.
இதுகுறித்து தமிழக மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் பேசவேண்டும். இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தவேண்டும். அப்படி தெளிவுபடுத்தினால் மட்டும் தான், நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பணமா செல்லாத நோட்டா என்பது தெரியும்.
அதுமட்டுமல்லாது மோடி அரசு இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது. இந்த ஊழலால் தான் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
பெரும் பணக்காரர்களுடைய கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவற்குத்தான் இந்த செல்லா நோட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது” என பகிரங்கமாக அவர் தெரிவித்துள்ளார்.