மக்கள் விரோத செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ள குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா, உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி தாக்குதலுக்கும் ஆளாகினர்.
அதேபோல, டெல்லி ஜே.என்.யூ மாணவர்களும் விடுதி கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.என்.யூ போராட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழகங்கள், கல்வியிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலின் மூலம் உறுதியாகியுள்ளது.
அதில், கடந்த 2016ம் ஆண்டு முதல் டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 2017ல் 61.53 சதவிகிதமாக இருந்த பல்கலைக்கழகத்தின் ரேங்கிங், தற்போது 68.8% ஆக அதிகரித்து பட்டியலில் 7வது இடத்தை பெற்றுள்ளது.
அதேபோல, அலிகர் பல்கலைக்கழகம் 11வது இடத்திலும், ஜாமியா பல்கலைக்கழகம் 12வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்திலும் உள்ளது. மேலும், சென்னை ஐ.ஐ.டி மீண்டும் முதலிடத்திலேயே இடம்பெற்றுள்ளது.