சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இந்துத்துவ மதவாத கும்பல் தொடந்து வன்முறையை கையாண்டு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மதவாத கும்பலின் தாக்குதலில் பலர் படுகாயமடைவதோடு, உயிரையும் இழக்கின்றனர்.
ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களிலேயே பெரும்பாலும் இதுபோன்ற கும்பல் வன்முறைகள் நடந்தேறி வருகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தலித் இளைஞர் மீது கொடூரமான முறையில் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கோட்வாலி பகுதியில் உள்ள அசோக்நகர் என்ற இடத்தில் தலித் இளைஞர் ஒருவரை சுற்றிவளைத்த கும்பல் ஒன்று, அவரை சரமாரியாகத் தாக்கியது. சுயநினைவில்லாமல் சாலையோரம் அந்த இளைஞர் மயங்கி விழுந்தும், அந்த கும்பல் அவரை விடாமல் தாக்கியுள்ளது.
அப்பகுதி பெண்கள் கெஞ்சியும் அந்த கும்பல் மூர்க்கத்தனமாக தாக்கியதில் தலித் இளைஞர் பலத்த காயமடைந்தார். இந்தக் காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் தலித் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், கும்பல் தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.