மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியமைத்த நாள் முதலே நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களையும், நடவடிக்கைகளையுமே மேற்கொண்டு வருகிறது. முந்தைய ஆட்சியின் போது பணமதிப்பிழப்பையும், ஜி.எஸ்.டியையும் கொண்டு வந்து மக்களை பாடாய் ப்படுத்தி எடுத்த இதே அரசுதான் தற்போது சிறுபான்மை மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்து மதவாத அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்றுவந்த மோடி அரசு தற்போது ஒட்டுமொத்தமாக அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டையே தாரை வார்த்து வருகிறது.
ஏற்கெனவே பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, நீர்மின் உற்பத்தி என பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றதோடு, நாட்டில் உள்ள 6க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் அதிகாரங்கள், பணி ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது பா.ஜ.க அரசு. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னணி பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் பெல் (BHEL) நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இஸ்பட் நிகாம், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், மேகான் உள்ளிட்டவற்றின் பங்குகளை விற்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மோடி அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கை உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெல் நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.