ஜே.என்.யூ பல்கலைக்கழகத்திற்குள் கடந்த 5-ம் தேதி ஒரு கும்பல் புகுந்து, அங்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைக் கலைத்து வன்முறையில் ஈடுபட்டனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகள், உருட்டுக் கட்டைகளால் மாணவர்களைத் தாக்கினர்.
இந்த கொடூரத் தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பினர் திட்டமிட்டு நிகழ்த்தியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தீவிரமடைந்து போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் அமைப்பு முழுப் பொறுப்பு ஏற்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்து ரக்ஷா தளம் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி என்கிற பூபேந்திர யாதவ் அளித்துள்ள பேட்டியில், “தேசவிரோத செயல்கள் நடக்கும் முக்கியத் தளமாக ஜே.என்.யூ பல்கலைக்கழகம் மாறிவிட்டது. அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
நடைபெற்ற இந்த வன்முறை சம்பவத்திற்கும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் நாங்கள் முழுப் பொறுப்பு ஏற்கிறோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கள் அமைப்பைச் சார்ந்தவர்கள் தான். இதேபோன்ற தேசவிரோத செயல்கள் எதிர்காலத்தில் மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்தாலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என மிரட்டல் விடுக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து டெல்லி போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு முகமூடி அணிந்த நபர்களைப் பிடிக்க போலிஸார் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு ஏ.பி.வி.பி அமைப்பினர் தான் காரணம், அதில் தொடர்புடையவர்களை கைது செய்யவேண்டும் என நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே, ஜனவரி 4-ம் தேதி பல்கலைக்கழக சர்வர் அறையை சேதப்படுத்தியதாக ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷா கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை இதுவரை போலிஸார் கைது செய்யாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக மாணவர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது இந்த தாக்குதலுக்கு, இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஏன் போலிஸார் மாணவர்கள் மீது முன்பே வழக்குப் பதிவு செய்தனர்? இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏ.பி.வி.பி., அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் என தகவல் வெளியான நிலையில் ஏன் இந்து ரக்ஷா தளம் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதன் மூலம் ஏ.பி.வி.பி., அமைப்பினரை பாதுகாக்க முயற்சி நடக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.