பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என கண்டித்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள தேசிய குடியுரிமை பதிவேடு சட்டத்துக்கும் மக்களும் , எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், மக்களின் போராட்டங்கள் எதற்கும் செவி மடுக்காமல் உள்ள பா.ஜ.க அரசு தன்னுடைய மதவாதத்தை நாட்டு மக்களிடையே பரப்பும் வகையில் என்.சி.ஆர் மற்றும் சி.சி.ஏவை அமல்படுத்துவதிலேயே முனைப்புக் காட்டி வருகிறது.
அந்த வகையில், என்.சி.ஆரை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக உள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) கொண்டு வரப்படும் என அறிவிப்பட்டு அதற்கான கையேடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
அந்த கையேட்டில் க்ரீகோரியன் / ஆங்கில மாதங்களுடன் தொடர்புடைய பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் கொண்ட தொகுப்பு மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்னவெனில், அந்த கையேட்டில் உள்ள விடுமுறை, பண்டிகை நாட்கள் அடங்கிய பட்டியலில் இஸ்லாமியர்களின் பண்டிகைகளான ரமலான், மிலாடி நபி, பக்ரீத், மொகரம் உள்ளிட்டவை புறக்கணிக்கப்பட்டு இந்து, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த மதத்தினர் கொண்டாடக்கூடிய விழாக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒருதலைபட்ச அரசாக உள்ளது என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் எதுவும் இருக்க முடியாது என்கிற வகையிலேயே இந்த பட்டியல் வெளியாகியுள்ளது என கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.