கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான, ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், ஜே.எம்.எம் மற்றும் ஆர்.ஜே.டி கூட்டணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு நிகழ்ச்சி அம்மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற்றது.
இந்த பதவியேற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆளுநர் திரெளபதி முர்மு, ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மூவர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அடுத்த ஓரிரு வாரங்களில் மற்ற அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரனுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், ட்விட்டரிலும் புகைப்படங்களை பகிர்ந்து தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, நாட்டில் 70 சதவிகிதத்துக்கும் மேலான மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.,வின் தூண்கள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கியுள்ளது எனவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.