பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடைபெற்றது. நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் போது போலிஸை ஏவி ஆளும் அரசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
இந்த வன்முறையின் போது பொதுமக்களை விட பாதுகாப்பில் ஈடுபட்ட போலிஸாரே பொது சொத்துக்களையும், தனியார் சொத்துகளை சேதப்படுத்தினர். இதுதொடர்பான வெளியான வீடியோவில் அனைத்து இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டது போலிஸாரே என்று அம்பலமாயின.
இந்நிலையில், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 498 பேரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி அரசு அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசின் இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவடையாத நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதன்காரணமாக உத்தர பிரதேசத்தின் பல மாநிலங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபடும் சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.
பறிமுதல் செய்யவேண்டும் என்றால் போலிஸாரின் சொத்துக்களைத் தான் பறிமுதல் அரசு செய்யவேண்டும். பொதுமக்கள் மீது அரசு எடுக்கும் நடவடிக்கையால் பலர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.