வானில் அரிய நிகழ்வாக நெருப்பு வளைவிலான சூரிய கிரகணம் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றியது. இந்த சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் 11.30 வரையில் நிகழ்ந்தது.
தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் என பல்வேறு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தெளிவாகவும், மற்ற மாநிலங்களில் சற்று மங்கலாகவும் தென்பட்டுள்ளது. முன்னதாக துபாய் நாட்டில்தான் முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றியது.
இந்த கிரகணத்தை காண்பதற்காக மக்கள் காலை முதலே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். மேலும், #SolarEclipse2019 என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. கிரகணத்தை சிறப்பு கண்ணாடி மூலம் பார்த்த பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சூரிய கிரகணத்தை காண முடியாமல் போனது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நாட்டு மக்களைப் போல நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண ஆவலாக இருந்தேன்.
ஆனால், டெல்லியில் மேகமூட்டமாக இருந்ததால் என்னால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை. இருந்தாலும், கோழிக்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் கிரகணம் தென்பட்டதை நேரலையில் காண நேர்ந்தது. மேலும், சூரிய கிரகணம் தொடர்பாக வானியல் நிபுணர்களிடம் கேட்டு அறிந்துகொண்டேன்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.