பள்ளி ஒன்றில் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வில் பாபர் மசூதியை இடித்து ராம ஜென்ம பூமி அமைப்பது போலான காட்சியை அரங்கேற்றுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கல்லட்க பிரபாகர் பட் என்பவரின் ஸ்ரீராம வித்யா கேந்திரா பள்ளியில் நடைபெற்றது எனத் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சதானந்த கௌடா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கர்நாடக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
சமூகத்தில் மதிப்புமிக்கவர்கள் கூடியிருக்கும் நிகழ்ச்சியிலேயே, மாணவர்களிடையே மத வேற்றுமை எண்ணத்தைப் பரப்பும் வகையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான காட்சியை நாடகமாக செயல்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து மத வெறுப்பை விதைத்து, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் சிறுபான்மையினரை வெகுவாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
மாணவர்களிடையே மத வேறுபாட்டை வளர்க்கும் வகையிலும், இந்துத்வ எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளியில் நடத்தப்பட்ட இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிகின்றன. சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான இந்தச் செயலை சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.