பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்சியாக அரங்கேறிவருகிறது. இந்த சம்பவத்தை இந்துத்வா அமைப்பைச் சேர்ந்த பலர் திட்டமிட்டு நடத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா என்ற பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் பிரியாணி விற்று வாழ்க்கையை நடந்தி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல பிரியாணி விற்றுக் கொண்டிருந்த லோகேஷிடம் இந்துத்வா கும்பலைச் சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சாதி பெயரை கூறி தீட்டி ‘நீ பிரியாணி விற்கிறாயா’ என கேட்டு கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். மேலும், வாகனத்தில் இருந்த பிரியாணி பாத்திரத்தை கீழே தள்ளி லோகேஷையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரபுபுரா போலிஸார், பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அடிக்கடி தன்னிடம் அவர்கள் ரகளை செய்வதாக லோகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகியிருப்பதால் போலிஸார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலித் சமூகத்தைச் சார்ந்தவர் மீது கும்பல் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.