இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடி வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவிகிதமாகவே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி( ஏ.டி.பி - Asian Development Bank ) கணித்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, 7 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்திருந்தது. தற்போது, அதிலிருந்து மேலும் 1.4 சதவிகிதத்தை அதிரடியாக குறைத்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பான ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெற்காசியாவில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான் மிகக் குறைவு என்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இந்தியாவின் இந்த மந்தநிலைக்கு கடந்த 2018-ம் ஆண்டில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியிலும், கடன் வழங்குவதிலும் பிரச்னைகளைச் சந்தித்ததாகவும் இவற்றையே வளர்ச்சி குறைவதற்கான முக்கியக் காரணங்களாகப் பார்ப்பதாகவும் ஏ.டி.பி தெரிவித்துள்ளது.
அதேபோல் மக்களின் நுகர்வுப் பழக்கம் குறைந்தது, வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, கிராமப்புறங்களில் நிலவும் பொருளாதாரத் தேக்கம், விவசாயம் தொடர்பான பிரச்சனை, கடன் வழங்குவதில் பற்றாக் குறை ஆகியவையும் வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) 6.1 சதவிகிதமாகவும், உலக வங்கி 6 சதவிகிதமாகவும் கணித்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 5 சதவிகிதம் என்று கூறியிருந்தது.
தற்போது ஆசிய வளர்ச்சி வங்கியும் இதனையொட்டியே கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்த கணிப்பு மோடி அரசிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.