இந்தியா

சமஸ்கிருதம் .. சர்க்கரை நோய்.. நாசா விஞ்ஞானிகள் : நாடாளுமன்றத்தில் கட்டுக் கதைகள் சொன்ன பா.ஜ.க எம்.பி.,

சமஸ்கிருதம் பேசினால் நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பும் அளவும் குறைந்து வரும் என பா.ஜ.க எம்.பி. கணேஷ் சிங் மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

சமஸ்கிருதம் .. சர்க்கரை நோய்.. நாசா விஞ்ஞானிகள் : நாடாளுமன்றத்தில் கட்டுக் கதைகள் சொன்ன பா.ஜ.க எம்.பி.,
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் பா.ஜ.க எம்.பி. கணேஷ் சிங் பேசினார். அப்போது, “நாட்டு மக்கள் தினமும் சமஸ்கிருதம் பேசிவந்தால், நரம்பு மண்டலம் சீராகும், உடலில் சக்கரை அளவும், கொழுப்பும் அளவும் குறைந்து கட்டுக்குள் வரும்” என்றார்.

மேலும் பேசிய அவர், சமஸ்கிருத மொழியை கம்ப்யூட்டர் புரோகிராமில் வடிவமைத்தால் கணினிக்கு எந்தவித பிரச்னையும் ஏற்படாது எனஅமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கூறியுள்ளதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, இஸ்லாமிய மொழிகள் உள்பட உலகில் பேசப்படும் 97% மொழிகள் சமஸ்கிருதத்தை கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் அதிலிருந்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.

பா.ஜ.க எம்.பி.யின் இத்தகைய பேச்சுக்கு தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பின்னர் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய தி.மு.க., எம்.பி. ஆ.ராசா, “சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழ் வரவில்லை.

குறிப்பாக திராவிட மொழிகளில் தமிழ் 4,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிக்கது. இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. ஆனால், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. மேலும், பா.ஜ.க எம்.பி.க்கள் சமஸ்கிருதத்தின் மூலம் அறிவியல் கல்வி குறித்து பேசுவது வியப்பளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக பா.ஜ.கவினர் சமஸ்கிருதமே உலகின் ஆதி மொழி என பேசிவரும் நிலையில், தற்போது பா.ஜ.க எம்.பி. இதுபோல பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories