இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழில்கள் ‘ஆழ்ந்த சிக்கலில்’ உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றில் ரகுராம் ராஜன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், தொழிலாளா் சட்டங்கள், வரி வசூல், வங்கித் துறை உள்ளிட்டவற்றில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் நெருக்கடியை அடைந்துள்ளது. இந்த பிரச்னை எதனால் ஆனது என்பதை ஆராயவேண்டும் எனவும் நிர்வாகத் திறன் குறித்து ஆராய வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுத்தல் - திட்டமிடுதல் போன்றவற்றில் பிரதமர் அலுவலகமும், பிரதமருக்கு நெருங்கியவர்களுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளை நிர்வகிக்க உதவுமே தவிர பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை நிர்வகிக்க உதவாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதால் சிலர் மட்டுமே பயன்பெறுவார்கள். அதுமட்டுமின்றி, பொருளாதார நடவடிக்கை குறித்த இத்தகைய முடிவுகளை எடுத்திருப்பவர்களுக்கு பொருளாதாரம் செயல்படுவது குறித்த அடிப்படைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.