உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தக் கோரி தி.மு.க தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, மீண்டும் தேர்தலை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜனநாயகத்தை காக்கும் வகையில், அந்த தீர்ப்பு அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது. தி.மு.க சார்பில் அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி மறுவரையறை சரியாக இல்லை. இட ஒதுக்கீடு முறையாக இல்லை. 2016 முதல் தி.மு.க இதனை வலியுறுத்தி வருகிறது. அப்போதே நாங்கள் இதுகுறித்து நீதிமன்றத்திற்கு சென்றோம். அதற்கான தீர்ப்பும் இன்று கிடைத்துள்ளது.
தற்போது தி.மு.க எடுத்து வைத்த கோரிக்கையின் நியாயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மறுவரையறை முடியாமல் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது ஏன் என்றும், சட்ட நடைமுறைகளை கடைபிடிக்காதது ஏன் என்றும் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிம் முறையான உள்ளாட்சி அமைப்பை அமைக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தி.மு.கவின் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” எனத் தெரிவித்தார்.