இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் முன்னணியில் செயல்பட்டு வந்தன. இந்தியாவில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக தொலைத்தொடர்புத் துறையில் காலடி வைத்ததிலிருந்து மேற்கண்ட இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் குறைந்து நிறுவனம் கடும் பின்னடைவைச் சந்தித்தது.
இதனிடையே, மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கடும் எதிரிப்பு தெரிவித்தன.
ஆனாலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டிய 92,641 கோடி ரூபாயை செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 1.47 லட்சம் கோடி ரூபாயை 2022-ம் ஆண்டு வரை செலுத்தலாம் என அவகாசம் வழங்கியுள்ளது.
சமீபத்தில், வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சேர்மன் குமாரமங்கலம் பிர்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “மத்திய அரசாங்கத்தின் நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்பட்டால் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை தொடர்ந்து நடத்தமுடியாது.
குறிப்பாக நாங்கள் கோரிய நிவாரணத் தொகையை அரசு வழங்காவிட்டால் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் சேவைகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு மேல் எங்களது பணத்தை முதலீடு செய்யமுடியாது” என்று பிர்லா கூறினார்.
மேலும், மோசமான வழியில் சம்பாதித்த பணம் செல்லும் வழியில் நல்ல பணமும் செல்லவேண்டிய அவசியம் இல்லை” என முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை சாடிப் பேசினார்.
முன்னதாக பிர்லாவின் இதே கருத்தையொட்டி, கடந்த நவம்பர் மாதம் வோடஃபோனின் தலைமை நிர்வாகி நிக் ரீட், “இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அதிக வரி மற்றும் கட்டணங்களை குறைக்காவிட்டால், வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவது சந்தேகமே” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.