நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் சாலை விபத்தால் உயிரிழந்ததாக மத்திய அரசு அறிக்கை வெளியிடப்பட்டது.
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் அபராத முறையை பன்மடங்கு உயர்த்தி புதிய மோட்டார் சட்டத்தை உருவாக்கியது மத்திய அரசு. அதில் குறிப்பாகத் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கான அபராதத்தை உடனடியாக செலுத்த வைக்கிறது காவல்துறை.
மேலும், காவல்துறை சார்பிலும் ஹெல்மெட் கட்டாயம் அணிவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், பெரும்பாலான சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவதாலேயே நிகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தாமோஹ் மாவட்டத்தில் உள்ள தேஜ்கார் என்ற பகுதியில் கடந்த மாதம் 20ம் தேதி நிகழ்ந்த விபத்தில் மஹேந்திர தீக்ஷித் என்பவரின் மகன் மரணமடைந்தார்.
ஹெல்மெட் அணியாததால் தனது மகன் விபத்தில் உயிரிழந்தது மஹேந்திர தீக்ஷித்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மகனின் இரங்கல் கூட்டத்தை நடத்திய மஹேந்திர தீக்ஷித், அங்கு வந்த தனது உறவினர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் தலைக்கவசத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும், “ஹெல்மெட் அணியாததால் எனது மகன் உயிரிழந்தது போன்று இனி யாரும் இறந்துவிடக் கூடாது என்ற நோக்கில் ஹெல்மெட்களை இலவசமாக வழங்குகிறேன்” என மஹேந்திர தீக்ஷித் கண்கலங்கி உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.