ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் அதேப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி 1-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 30-ம் தேதி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் விளையாட்டு போட்டிகள் முடிந்து மாணவர்கள் பள்ளியிலிருந்து புறப்பட்ட நிலையில், சிறுமி மட்டும் வராததால் சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
பின்னர் அலிகார் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியைத் தேடும் பணியில் பெற்றோர், போலிஸார் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் புதரில், ரத்த வெள்ளத்தில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார்.
பின்னர் சிறுமியின் சடலத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான முதற்கட்ட விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமியின் கழுத்தில் அவர் சீருடையில் அணிந்திருந்த பெல்ட்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுமி உடல் மீட்கப்பட்ட இடத்தில் மது பாட்டில்கள், ரத்த கரைகள் என காணப்பட்ட தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்?, எத்தனைப்பேர் என்பன குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.