இந்தியா நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், நடப்பு காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 ஆக குறைந்துள்ளது. ஜி.டி.பி வீழ்ச்சி இந்திய பொருளாதாரம் குறித்து மக்களிடையே பெரும் அச்சத்தை விதைத்துள்ளது.
அடுத்த காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி இன்னும் மோசமாக இருக்கும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ஆலோசனைப்படி அவரது குடும்பத்தினர் ட்வீட் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "எதிர்பார்த்ததை போல ஜி.டி.பி. வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 4.5 ஆக குறைந்துள்ளது. ஆனால், அரசு இன்னும் அனைத்தும் நலமாக இருக்கிறது என்றே கூறிவருகிறது. அடுத்த காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 4.5-ஐ விட அதிகமாக இருக்க போவதில்லை. இன்னும் மோசமாகவே இருக்கும்.
ஜார்க்கண்ட் மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து பா.ஜ.க.வின் கொள்கைகளையும், நிர்வாக முறையையும் நிராகரிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் முதல் வாய்ப்பு அமைந்துள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.