உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சோபன் பிளாக் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் பால் என்ற பெயரில் பாலில் அதிக தண்ணீரை கலந்து மதிய உணவாக கொடுத்துள்ள சம்பவம் அமபலமாகியுள்ளது.
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தின்படி, மதிய உணவாக காய்கறிகள் நிறைந்த சாதம் மற்றும் பால் வழங்கவேண்டும். ஆனால் கடந்த புதன் கிழமை மதிய உணவாக ஒரு லிட்டர் பால் மட்டும் இருந்துள்ளது.
அதனால் அதில் தண்ணீரை நிறைய ஊற்றி சுடவைத்து 81 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். கடந்த காலத்திலும் இதேபோன்று நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் போது, “171 மாணவர்கள் பள்ளியில் படித்துவருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற அன்று 81 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்துள்ளனர். இருக்கின்ற பாலை வைத்துதான் மாணவர்களுக்கு அளித்தோம்.” என கூறியுள்ளார்.
முன்னதாக இந்த செய்தி கிராம பஞ்சாயத்து உறுப்பினருக்குச் கிடைக்க, அவர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது தான் பாலில் தண்ணீர் கலக்கும் செயலை அவர்வீடியோவாகப் பதிவு செய்து மாவட்ட கல்வி துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் கல்வி அதிகாரி கோரக்நாத் படேல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், தவறுக்கு மதிய உணவுத் திட்டத்தின் பொறுப்பாளர்களே காரணம் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தியும், உப்பும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.