உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் புர்காசி நகரைச் சேர்ந்தவர் சுக்பால் சிங் பேடி. சீக்கிய மதத்தைச் சேர்ந்த சுக்பால் சிங் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், சீக்கியர்களின் குருவான குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் விழா சீக்கியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையெட்டி பல நிகழ்ச்சிகள் இந்த மாதம் முழுவதும் நடத்தப்படும். பலர் இந்த மாதத்தில் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து மகிழ்வார்கள்.
அந்த வகையில், அப்பகுதி முஸ்லிம் மக்கள் நீண்ட நாட்களாக மசூதி கட்ட பல முயற்சி எடுத்துவருகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் மசூதி கட்டுவதற்கு நிலம் இல்லாமல் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில், 70 வயது சுக்பால் சிங், தன்னிடம் இருக்கும் 900 சதுர அடி நிலத்தை முஸ்லிம் மக்கள் மசூதி கட்டுவதற்கு தானமாக வழங்கியுள்ளார்.
மேலும் இந்த நிலத்தை ஒப்படைப்பு தொடர்பான ஆவணங்களை நகர பஞ்சாயத்து தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து மூலம் முஸ்லிம் மக்களுக்கு மசூதி கட்டப்போவதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து சுக்பால் சிங் கூறுகையில், “இந்தியாவில் உள்ள மக்கள் சகோதரத்துவத்துடன் இருப்பதாகவும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில், தங்களின் புனித நாளாக கருதும் குருநானக்கின் பிறந்த நாளான்று இந்த நல்ல காரியத்தை செய்வதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுக்பால் சிங்கின் இந்த நடவடிக்கை அனைத்து மதத்தினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.