பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் சாமியார் நித்தியானந்தாவிடம் தனி செயலாளராக இருந்தபோது, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தனது குழந்தைகளை அங்கு சேர்த்துள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி, குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சந்திக்கச் சென்ற அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிரடைந்த சர்மா, தனது மகளை மீட்டுத்தருமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்து இருந்தார்.
அதேபோல, தனது மகள்களை காணவில்லை என்று நித்தியானந்தாவின் முன்னாள் செயலாளர் ஜனார்த்தன் சர்மா காவல்துறையிலும் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறை, நித்யானந்தா ஆசிரம பெண் நிர்வாகிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன சர்மா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் மாநில காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''காணாமல் போனதாக கூறப்படும் சிறுமிகள் குறித்து எங்களுக்கு விவரம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள இரண்டு சிறுமிகளையும் டிசம்பர் 10ம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவோ உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். நித்தியானந்தாவை கைது செய்யக்கோரி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.