பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் சுவாதி சிங் என்ற பெண் அமைச்சர் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் ரியர் எஸ்டேட் தொடர்பாக அன்சால் டெவல்ப்பர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக லக்னோ கிரிமினல் பிரிவி போலிஸ் அதிகாரி பீனு சிங் என்பவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளியுள்ளார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிகாரிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க அமைச்சர் சுவாதி சிங் பெண் போலிஸ் அதிகாரியை செல்போனில் தொடர்புக் கொண்டு மிரட்டியுள்ளார்.
மேலும், “அன்சால் டெவல்ப்பர்ஸ் நிறுவனத்தின் மீது போலி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள். இது பெரிய இடத்துப் பிரச்சனை மற்றும் முதல்வருக்கும் இதுகுறித்து தெரியும். எனவே இந்த வழக்கை முடித்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களது பதவியில் நீடிக்க விரும்பினால் என்னை நேரில் வந்து பார்” என கூறி முடித்துள்ளார்.
தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு மாநிலத்தின் அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களுக்கு ஆதரவாக பெண் போலிஸ் அதிகாரியை மிரட்டிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சுவாதி சிங் விளக்கம் அளிக்கும் படியும், அவர் மீது விசாரணை நடத்தவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.