நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இத்தகைய பாதிப்புகளினால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை டெல்லி வாழ் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக வாகனங்களின் இயக்கத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு.
ஆனால், காற்று மாசுபாடு எவ்விதத்திலும் குறையவில்லை. காற்றின் தரம் வெகுவாகக் குறைந்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் டெல்லியில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் சுத்தமான காற்றை கட்டண முறையில் விற்பனை செய்யும் ஆக்சிஜன் வழங்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆக்சி ப்யூர்’ என்ற பெயரிலான இந்த மையத்திற்குச் செல்பவர்கள், குழாய் வழியே சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.
ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை என விதவிதமான வாசனையுடன் தயாராக இருக்கும் ஆக்சிஜனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், கேன்களில் அடைக்கப்பட்ட ஆக்சிஜனும் இந்த மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அதன் நிறுவனர் கூறுகையில், ''கடந்த மே மாதம் இந்த ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டது. 10 முதல் 15 நிமிடங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது.
சாதாரணமாக உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவை விட அதிகளவு ஆக்சிஜன் உள்ளிழுக்க அனுமதிக்கப்படும். சுவாசிக்கும் காற்றின் மணத்தை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு நறுமணத்திற்கும் விலை மாறுபடும்'' எனத் தெரிவித்தார்.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகட்டத்தில் இருப்பதால், சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்க மக்கள் அதிகளவில் இங்கு வருவதாகக் கூறப்படுகிறது. சுவாசிக்கும் காற்றைக்கூட காசு கொடுத்து வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.