மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பு நீக்கம், முறையற்ற ஜி.எஸ்.டி போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் படிப்படியாகச் சரிந்து வருகிறது.
குறிப்பாக சிறு-குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி இழுத்து மூடப்படும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தங்களின் நுகர்வுகளை வெகுவாக குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோர் செலவினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்முறையாக 2017-18-ம் ஆண்டில் நுகர்வோர் செலவினம் அடிமட்ட அளவிற்கு சரிந்துள்ளதாக பிஸினஸ் ஸ்டாண்ட் (business standard) ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவித்திருப்பதாவது, “நாடுமுழுவதும் கடந்த 2011-12ம் ஆண்டில் ஒரு மாதத்தில் தனிநபர் செலவழித்த தொகை 1, 501 ரூபாய் என இருந்தது. ஆனால் 2017-18-ம் ஆண்டில் மாதத்திற்கு தனிநபர் செலவழித்த தொகை 1,446 ரூபாயாக இருந்தது. இது 2011-12 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் அளவிற்கு குறைவு” என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்திய மக்கள் சாப்பிடுவதற்கான செலவையும் குறைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு, நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வேளையில் இந்த செலவுத்தொகை குறைப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் உணவிற்கான செலவினங்கள் குறித்து சில தகவல்களை தெரிவித்துள்ளது.
அதில், கிராமப்புறங்களில் உள்ள தனிநபர் உணவிற்காக செலவழிக்கும் தொகை 2011-12-ம் ஆண்டில் மாதத்திற்கு 643 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் 2017-18-ம் ஆண்டில் மாதத்திற்கு 580 ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய புள்ளிவிவரத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் பெரிய அளவிலான மாற்றமில்லை, 2011-12ல் 943 ரூபாயாக இருந்த செலவின தொகை 2017-18ல் 846 ரூபாயாக உள்ளது. இந்த ஆய்வு குறித்த முழுமையான தகவலை பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பின்னர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வு முடிவு பா.ஜ.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கிராமப்புற நுகர்வு அதிவேகமாக சரிந்திருப்பதாக ‘நீல்சன்’ நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.