மகாராஷ்டிராவில் அரசு அமைத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அளித்திடுமாறு தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் காலக்கெடு கொடுத்திருந்த போதிலும் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்த மோடி அரசின் செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “மகாராஷ்டிர ஆளுநர் நவம்பர் 12 இரவு 8.30 மணி வரையிலும் தேசியவாதக் காங்கிரஸ் கட்சிக்கு அரசு அமைத்திட, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை அளித்திடுமாறு அக்கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு காலக்கெடு கொடுத்திருந்தார். தான் அளித்த அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்திட குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.
வெளிநாட்டுக்குப் பறக்கத் தயாராக இருந்த பிரதமரை வைத்து, மிகவும் அவசரகதியில் கூட்டப்பட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டம், ஆளுநரின் பரிந்துரையை சரியென்று ஏற்றுக்கொண்டு, மத்திய ஆட்சியை அம்மாநிலத்தில் அமல்படுத்துவதற்காக அதனை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. இவை அனைத்தும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை நேரடியாக மீறிய செயல்களாகும்.
அவ்வழக்கின் தீர்ப்பில், அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டமன்றம்தான் என்பது மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறையைப் பின்பற்றாமலேயே, மத்திய பா.ஜ.க அரசு இவ்வாறு நடந்து கொண்டிருப்பது இந்திய அரசமைப்புச் சட்ட ஒழுங்கை நாணயமற்றமுறையில் மீறிய செயலாகும்.
குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பயன்படுத்திக்கொண்டு, பெரும்பான்மையைப் பெறுவதற்காக பா.ஜ.க, வேறு பல மாநிலங்களில் ஈடுபட்டதைப்போன்று, இழிவான செயல்களில் ஈடுபடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது மோடி அரசாங்கத்தால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது ஏவப்பட்டுள்ள மற்றுமொரு தாக்குதலாகும்” என அதில் கூறியுள்ளது.