கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க அரசு அறிவித்து இன்றோடு மூன்று வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்கள் செய்வோரும், அவசரத் தேவைகளுக்காக பணத்தை எதிர்பார்த்தோரும் பாதிக்கப்பட்டது ஒருபக்கம் இருக்க, இந்தத் திட்டத்தை ஆதரிக்க பா.ஜ.க-வினர் செய்த சர்க்கஸ் இருக்கிறதா அப்பப்பா..
மோடியின் அறிவிப்பால் இரவோடு இரவாக கறுப்புப் பணம் ஒழிந்து, இந்தியப் பணப்புழக்கம் அமெரிக்கா, ஜப்பானையெல்லாம் முந்தப் போகிறது எனக் களித்துக் கனவு கண்டார்கள் பா.ஜ.க-வினர். ஆனால் இப்போது நிலைமை பல்லிளிக்கிறது.
2,000 ரூபாய் நோட்டு ஒரு அதிசய நோட்டு என எஸ்.வி.சேகர் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் மேஜிக் ஷோ காட்டத் தொடங்கிய தினமும் இன்றுதான். 2,000 ரூபாய் நோட்டு தொலைந்து போனாலும், நோட்டில் பொருத்தப்பட்டிருக்கும் நானோ சிப் உதவியுடன் GPS தொழில்நுட்பத்தின் மூலமாக அது இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விடலாம். இனி பணம் திருட்டு, கொள்ளை போக வாய்ப்பே இல்லை என இஷ்டத்துக்கு அளந்துவிட்டது பா.ஜ.க-வின் விஞ்ஞான விங்.
இந்த அதிரடி நடவடிக்கையெல்லாம் மோடி மக்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன 15 லட்சத்தை டெபாஸிட் செய்யத்தான் எனவும் சிலர் கதையளந்து கொண்டிருந்தார்கள்.பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் 132-வது முறையாக புதிய இந்தியா பிறந்ததாகவும் பிதற்றித் திரிந்தார்கள் பா.ஜ.க அபிமானிகள்.
எல்லாம் சில காலம் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிந்தபாடில்லை. இந்தியப் பொருளாதாரம் ஆட்டம்கண்டிருப்பது தான் மிச்சன். 90 நாள், ஆறு மாதம் என பூச்சாண்டி காட்டிய மோடியும் பின்னர் அந்தத் திட்டத்தையே வசதியாக மறந்துவிட்டார்.
பா.ஜ.க-வினரின் இந்த டீமானிட்டைசேஷன் காமெடிகளுக்கு மத்தியில், தேவைகளுக்குப் பணம் பெற முடியாமல், சிக்கித் சின்னாபின்னமானதென்னவோ சாமானிய மக்கள்தாம்.