கடந்த மூன்றுவருடங்களுக்கு முன்பு இதேநாளில் இரவு 8 மணியளவில் இந்திய பிரதமர் மோடி, நாட்டில் தற்போதுவரை புழகத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு பின்னர் இந்திய மக்களின் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. அப்போது சறுக்கலைச் சந்தித்த மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
முன்னதாக பணமதிப்பிழப்பின்போது 50 நாட்களில் சரிசெய்யப்படும் என்ற சொன்ன பிரச்சனைகள் பல தற்போது வரை சரிசெய்யமுடியாமல் போனது என்பதே நிதர்சனமான உண்மை. பின்னர் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துவைத்தார். தற்போது வரை பல மதிப்புகளில் புதிய ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறார்.
முதலில், அறிமுகம் செய்துவைத்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் பல தொழில்நுட்பங்கள் இருப்பதாகவும், அதை பதுக்கமுடியாது என்றும் பல பொய்களை பாஜக-வினர் கூறிவந்தனர். பின்னர் அவர்களின் பொய்களை பொருளாதார வல்லுநர்களே அம்பலப்படுத்தினர். தற்போது 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் பணத்தை பெறுவதற்கு மக்கள் பட்டவேதனைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
இந்நிலையில், புதிதாக வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை டீமானிட்டைசேஷன் செய்யவேண்டும் என, அதாவது செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று முன்னாள் நிதித்துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 31-ம் தேதி தன்னுடைய பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சுபாஷ் சந்திர கார்க் நேற்றைய தினம் ட்விட்டரில் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார்.
அதில், தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு கட்டுரையின் சுட்டியைப் பகிர்ந்துள்ளார். அதில் 2000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும்படி ஒரு குறிப்பை எழுதியுள்ளார். கட்டுரையின் 72-வது பகுதியில் இத்தகைய யோசனையை அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில், “மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் மொத்தமாக புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் மூன்று பங்கு நோட்டுகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுதான்.
ஏற்கனவே பெரிய அளவில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டுவிட்டது. அவைகள் புழக்கத்திற்கு வருவதில்லை. அதனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இந்திய பொருளாதாரத்தின் பண பரிவர்த்தனைக்காக செயல்படுவதில்லை. என்வே இந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டும் எளிதில் சத்தமில்லாமல் மதிப்பிழக்கச் செய்துவிடலாம்” என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பதிவிற்கு அரசு தரப்பில் பதில் வரவில்லை என்றாலும், அவரின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.