இந்தி , சமஸ்கிருதம் மற்றும் குலக்கல்வி முறையை திணிக்கும் வகையில் மோடி அரசு புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு மூலம் தயாரித்திருந்தது.
இந்த புதிய கல்விக்கொள்கை திட்டத்துக்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலவகையில் எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைதளங்களில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் மூலமும் தங்களது எதிர்ப்புகளை பலர் தெரிவித்தனர்.
தி.மு.க சார்பில் மூத்த நிர்வாகிகள், கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டு, மும்மொழிக்கொள்கை உட்பட பல புதிய மாற்றங்கள் குறித்தான புதியக் கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபோன்று தொடர்ந்த பலத்த எதிர்ப்பை அடுத்து மும்மொழிக் கொள்கை தொடர்பாக பொதுமக்களிடத்திலும், கல்வியாளர்களிடத்திலும் கருத்து தெரிவிக்குமாறு கூறிய மத்திய அரசு அதற்கு அவகாசமும் வழங்கியது. மேலும், திரையுலகைச் சேர்ந்த சூர்யா உள்ளிட்ட பலரும் இந்த புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசியிருந்தனர்.
இந்த நிலையில், கருத்து கூறுவதற்கான அவகாசம் முடிவடைந்ததை அடுத்து புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், மும்மொழிக் கொள்கையில் எந்த மாற்றும் இல்லை என்றும், இந்திக்கு பதிலாக நாட்டின் செம்மொழி அந்தஸ்தில் உள்ள மொழியை மூன்றாவது பயிற்று மொழியாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு வருகிற புதன்கிழமை மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இந்தியாவில் செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திக்கு பதிலாக சமஸ்கிருதத்தை பா.ஜ.க புகுத்த நினைப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.