இந்தியா

“கம்யூனிசம் நீடிக்கும்; நிலைத்த வெற்றிகளைக் குவிக்கும்” - திராவிடர் கழகம் வாழ்த்து!

கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு தொடக்கவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“கம்யூனிசம் நீடிக்கும்; நிலைத்த வெற்றிகளைக் குவிக்கும்” - திராவிடர் கழகம் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க விழாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு :

“இன்று (17.10.2019) கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்பது அறிய மகிழ்கிறோம்!

1920ம் ஆண்டு அக்டோபர் 17 அன்று தாஷ்கண்ட் நகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கிளைகள் உருவாக்கப்பட்டு, மக்கள் போராட்டக் களங்கள் முளைத்தன.

இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை 1936ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது என்பது வரலாற்றுச் சுவடு ஆகும்.

1926ல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தந்தை பெரியார், சோவியத் ரஷ்யாவைக் காணச் செல்லும் முன்பே அவரது ‘குடிஅரசு’ வார ஏட்டில், பிரெடரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் ஆகியோரின் கம்யூனிஸ்ட் (Communist Manifesto) அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார் (11.10.1931, ‘குடிஅரசு’).

“கம்யூனிசம் நீடிக்கும்; நிலைத்த வெற்றிகளைக் குவிக்கும்” - திராவிடர் கழகம் வாழ்த்து!

அதன்பிறகே அவர் சோவியத் யூனியனுக்குச் சென்றார். சோவியத் யூனியனுக்குச் சென்ற தலைவர்களிலேயே அதிக நாள் அங்கு தங்கிய தலைவர் என்ற தனிச்சிறப்பைப் பெற்றவர் தந்தை பெரியார்!

தோழர் மா.சிங்காரவேலர் அவர்களது நட்பு, லட்சியப் பணியில் தோழமையும் கொண்டு, ஒரு புது உலகைப் படைக்க முயலத் தொடங்கினார்.

எனவே, சுயமரியாதை இயக்கம் (திராவிடர் இயக்கம்), கம்யூனிஸ்ட் கட்சி இவை சகோதர தோழமை இயக்கங்களே ஆகும். அன்று தொடங்கிய கொள்கை உறவு - இடையில் சில உரசல்கள் வந்த போதிலும் - இன்றும் தொடர்கிறது; நாளையும், என்றும் தொடரும்.

திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். சோவியத் யூனியன் உடைபட்டதாலேயே கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பது சிலரின் பிதற்றல்.

காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? கிரகணங்களால் நிலவுதான் நிரந்தரமாக மறைவதுண்டோ?

காய்ந்த வயிறு, பெருத்தத் தொந்தி, ஆதிக்க முதலாளித்துவம், இவற்றை எதிர்த்து, சமதர்ம இலக்குடன் ‘‘அனைவருக்கும் அனைத்தும்” கிட்டப் போராடும் தேவையும், உணர்வும் இருக்கும் வரை கம்யூனிசம் நீடிக்கும்; நிலைக்கும்; நிலைத்த வெற்றிகளையும் குவிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories