அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது.
பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் இன்று செயல்படத் தொடங்குகிறது. அதில், அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கின் விசாரணை 38-வது நாளாக இன்று நடைபெறவுள்ளது. அயோத்தி வழக்கில் நீண்ட விசாரணையை சந்தித்து வரும் நிலையில், இன்று இறுதி கட்ட வாதத்துக்குள் நுழைகிறது.
இதில், முஸ்லிம் தரப்பினர் இன்று தங்கள் விவாதங்களை நிறைவு செய்கின்றனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்து அமைப்பினர் தங்களின் மறுப்புகளை சுருக்கமாக தெரிவிக்க உள்ளனர். வரும் 17-ம் தேதியுடன் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை முடிகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில்
144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நவம்பர் 10-ம் தேதி வரை இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசியல் கூட்டங்களுக்கும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.