ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், கடந்த மாதம் 5ம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவலை சிறப்பு நீதிமன்றம் வரும் 17ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதனிடையே அமலாக்கத்துறை, ஐ.என்.எக்ஸ் மீடியா ஒப்பந்தத்தின் போது நடைபெற்ற பணப்பரிவர்த்தனை தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி இன்று டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
இதுவரை ப.சிதம்பரத்தின் உதவியாளர் பெருமாள் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தியதாகக் கூறியுள்ள அமலாக்கத்துறை அடுத்த கட்டமாக சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
அதற்காக திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கான உத்தரவை சிறப்பு நீதிமன்றம் வழங்கியதும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.