ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி பெண் துளசி முண்டா. இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை, அவரது கணவர் சித்தரஞ்சன் முண்டா, மயூர்பஞ்சில் உள்ள பங்கிரிபோஷி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு துளசிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, 40 கி.மீ தூரத்தில் உள்ள பாரிபாடாவில் ’பண்டிட் ரகுநாத் முர்மு’ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர் சித்தரஞ்சன் முண்டா, அவசர அழைப்பு தொலைபேசி எண்ணுக்கு அழைத்துள்ளார். ஆனால் அங்கிருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து கர்ப்பிணி மனைவியை மருத்துவமனை நோக்கி அழைத்துச் சென்றார். ஆரம்ப சுகாதார பணிபெண் சுசித்ரா தத் என்பவரும் அவர்களுடன் சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெட்ரோல் இல்லாமல் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றது. அருகிலும் எந்த பெட்ரோல் நிலையமும் இல்லாத நிலையில் அடுத்த ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
45 நிமிடங்களாகியும் மாற்று ஆம்புலன்ஸ் வராத நிலையில், வலியால் துடித்த துளசி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட துளசியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் உள்ள குழ்ந்தையும் கர்பிணிப் பெண்ணும் உயிரிழந்தாக உறுதி செய்தனர். இதனையடுத்து பெண்ணின் சடலைத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கர்பிணிப் பெண்ணின் கணவர் கூறுகையில், ”அவசர உதவிக்கு அழைத்தும் அரசு அம்புலன்ஸ் சேவை எங்களுக்கு கிடைக்கவில்லை. அரசு சுகாதார நிலைய மருத்துவர்களும் எங்களுக்கு ஏற்பாடு செய்து தரவில்லை. அவர்களும் என் மனைவி மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்” என கதறி அழுகிறார்.