மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் ஊடுருவியர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள், அதேவேளையில் இந்துக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், தேசிய மக்கள் பதிவேடு குறித்து மம்தா பானர்ஜி தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டினார். அமித்ஷாவிற்கு எதிராக ட்விட்டரில் அம்மாநில மக்கள் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கினார்கள். மேலும் அமித்ஷாவின் பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு கொல்கத்தாவில் ஒரு நிகழ்விற்குச் சென்றிருந்தார் மம்தா பானர்ஜி. அப்போது அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதில் அளித்துள்ளார். அதில், “மதவேறுபாடுகள் இன்றி, மேற்கு வங்கத்தில் மக்கள் ஒற்றுமையுடன் சமய நல்லிணக்கத்துடன் துர்கா பூஜை கொண்டாடுகின்றனர்.
இது தான் எங்கள் மாநிலம். எங்கள் மாநிலத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எங்களின் விருந்தோம்பலைப் பெறலாம். அதேவேளையில் மக்களைப் பிரித்தாளும் முயற்சியில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அது வங்காளத்தில் பலிக்காது” என்றார். மேலும், அமித்ஷாவை மறைமுகமாகச் சாடிய மம்தா, “மக்கள் மனங்களில் பிரிவினைகளை ஏற்படுத்த வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.