கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மதக்கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற பெண்மணியின் மொத்த குடும்பமும் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பில்கிஸ் பானோ, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மதவெறியர்கள் ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானோ படுகாயங்களுடன் உயிர்தப்பினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த5 காவல்துறையினர் மற்றும் 2 டாக்டர்கள் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2017ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட 5 போலிஸ்காரர்கள் மற்றும் 2 டாக்டர்கள் ஆகிய ஏழு பேருக்கும் தண்டனை வழங்கியது. அதே ஆண்டு ஜூலை 10ம் தேதி உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று உத்தரவிட்டது.
காவல்துறையினரும், மருத்துவர்களும் ஆதாரங்களை அழித்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பானோ அடைந்துள்ள இழப்பு மிக அதிகம் என்பதால், அவருக்கு 50 லட்ச ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குஜராத் அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. குஜராத்தில் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று, ஒரு இழப்பீட்டு நடைமுறை உள்ளது. அதன்படிதான் இழப்பீடு வழங்க முடியும் என்று குஜராத் அரசு கூறியது.
தற்போது, இதை ஏற்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை பில்கிஸ் பானோவுக்கு வழங்க வேண்டும் மற்றும் அவருக்கு வேலைவாய்ப்பும், குடியிருக்க வீடும் வழங்கிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.