மத்திய அரசின் கடன், 88 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகமே புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள இறுதிக் காலாண்டின் போது, மத்திய அரசுக்கு இருந்த கடன் 84 லட்சத்து 68 ஆயிரம் கோடியாகும்.
ஆனால், 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் அதாவது ஏப்ரல் முதல் ஜூன்ஆகிய மூன்றே மாதங்களுக்குள் இந்தக் கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. நடப்பு 2019 - 20ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கையை மத்தியநிதியமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. அதிலேயே இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூனில், இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடி என்ற அளவில் இருந்தது.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளில், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்தது. இதுதான் தற்போது 2019 ஜூன் வரையிலான காலத்திற்குள் ரூ. 88 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியா பெற்ற மொத்தக் கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், 5 ஆண்டுகளில் மட்டும் 34 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கி, இந்திய அரசின் கடன் சுமையை மோடி உயர்த்தியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீ நேட் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், அவரது ஆலோசகர்களும் தீர்வு காண முடியாத குழப்பத்தில் உள்ளனர். சந்தையில் பெருநிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க ஊக்கமளிக்கவில்லை. பொருளாதார மந்த நிலையை சரி செய்ய உங்களிடம் சரியான வியூகம் இல்லை” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.