ஐஐடி-யில் எம்.டெக் படிப்புக்கான டியூஷன் கட்டணம் 10 மடங்கு உயர்தர்ப்பட இருப்பதாக ஐஐடி கவுன்சில் கூட்டதில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் திறன்வாய்ந்த மாணவர்களை உருவாக்குவதில் ஐஐடி கல்வி நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு துறையின் கீழ் செயல்படக் கூடிய 23 ஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் அடங்கிய ஐஐடி கவுன்சில் கூட்டம் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நேற்று நடந்தது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மாணவர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஐஐடி நிறுவனங்களில் எம்.டெக்., படிப்புக்கான செமஸ்டர் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வரை ஐஐடியில் செமஸ்டருக்கு 20,000 தொடங்கி 50,000 வரை மட்டுமே டியூஷன் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அந்த கட்டணமானது வருட்டதிற்கு 2 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
2019-2020ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு படித்து வரும் 12 ஆயிரம் மாணவர்களில் 9,280 மாணவர்கள் உதவித்தொகை பெறத் தகுதி உடையவர்கள். எம்.டெக்., மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகையான 12,400 ரூபாயை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி, சென்னை, மும்பை, காரக்பூர், கான்பூர், ரூர்கீ, கவுகாத்தி ஆகிய ஐஐடி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியைக் குறைக்க இருப்பதாகவும், அந்த நிதியை மாணவர்களிடம் வசூலிக்கவே மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகவும் ஐஐடி பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும். அந்தந்த ஐஐடி நிறுவனங்கள் செய்யக்கூடிய கட்டுமானப் பணிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்தும் அந்தந்த ஐஐடி நிறுவனங்கள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுதப்பட்டு இருப்பதாகவும், வங்கியில் கடன் வாங்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தொகையை பெறவும் அமைச்சகம் அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் மிக முக்கிய கல்வி நிறுவனங்களின் மீது பா.ஜ.க அரசு தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ஐஐடி-களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியைக் குறைந்து அந்தச் சுமையை மாணவர்களின் தலையில் கட்டுவது எந்த வகையில் நியாயம் என்று கல்வியாளர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
- சி.ஜீவா பாரதி