உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷப்னம். இவரது கணவர் முகமது காசிமுக்கும் இவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடத்துள்ளது. இந்த தம்பதியருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், ஷப்னம் குடும்பத்தினரிடம் முகமது காசிமும், அவரது தாயும் 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் ஷப்னத்தின் சகோதரரான ஜாஹித் அலி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து காசிம் குடும்பத்தினர் ஷப்னத்திடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியுள்ளனர். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஷப்னம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஷப்னத்தின் மிரட்டலால் ஆத்திரமடைந்த முகமது காசிமும், அவரது தாயாரும் சேர்ந்து நேற்று முன்தினம் ஷப்னம் மற்றும் அவரது 3 மாத பெண் குழந்தையை வீட்டிற்குள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தனர். இதையடுத்து முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் வீட்டிலிருந்து தப்பித்து தலைமறைவாகினர்.
ஷப்னத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவுகளை உடைத்து தீயை அணைத்தனர். பின்னர் ராம்பூர் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலிஸார் எரிக்கப்பட்ட உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது போலிஸார் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தப்பித்த குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.