ஆட்டோமொபைல் தொழில் துறையில் ஏற்பட்ட மந்தநிலைக்கு ஓலா, ஊபர் சேவைகள்தான் காரணம் என்று கூறி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூகவலைதளவாசிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனைக் காப்பாற்றுகிறேன் என்று கூறி, களத்தில் குதித்தார் மற்றொரு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். “தொலைக்காட்சியில் காட்டப்படும் கணக்கீடுகளின் வழியில் செல்ல வேண்டியதில்லை, அதாவது 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் 12 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய கணிதங்கள் ஒன்றும் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவவில்லை” என்று போகிறபோக்கில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, நிர்மலா சீதாராமனை விட்டுவிட்ட சமூகவலைத்தள வாசிகள், “புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது நியூட்டனா, ஐன்ஸ்டீனா?” என்று பியூஷ் கோயலை பிடித்துக் கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கிண்டலாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், “கேட்ச் பிடிக்க வேண்டுமென்றால், பந்தை குறிபார்க்க வேண்டும். அதுதான் விளையாட்டின் மீதான உண்மையான ஆர்வம்.
இல்லாவிட்டால், நீங்கள் புவி ஈர்ப்பு, கணக்கு, ஓலா, ஊபர் மீது பழி சுமத்திக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்” என தன் பங்குக்கு கிண்டலடித்துள்ளார். அதோடு, கிரிக்கெட்டில் பவுண்டரி எல்லை அருகே வீரர் ஒருவர் கடினமான கேட்ச் ஒன்றை பிடிக்கும் வீடியோவையும் அவர் அதில் பகிர்ந்துள்ளார்.
இந்த விமர்சனங்களையடுத்து அமைச்சர் பியூஷ் கோயல், “ஆமாம்.. ஐன்ஸ்டீன் பற்றி நான் பேசும்போது தவறுதலாக வாய் தவறிப் பேசிவிட்டேன்; நான் தவறு செய்ததை பொதுவெளியில் ஒப்புக் கொள்கிறேன்” என்று சரண்டர் ஆகியுள்ளார்.