தெலங்கானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து கடந்த செப்.,1ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
அதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்திருந்தார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆளுநராக பதவியேற்ற பின் தனது தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, ஆனந்தன் மற்றும் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். உணர்வுப்பூர்வமான அந்த தருணத்தில், தனது மகளை வாழ்த்தியனுப்பினார் குமரி ஆனந்தன்.
ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் இரண்டாவது ஆளுநர் மற்றும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையை தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆளுநர் தமிழிசைக்கு ராஜ் பவன் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.