நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் வாகன உற்பத்தியையும் நாளுக்கு நாள் குறைத்து வருவதோடு, ஆட்டோமொபைல் தொழில்சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் உற்பத்தியை குறைத்து வருகின்றன.
இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களான ஹூண்டாய், மாருதி , டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து, கனரக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'அசோக் லேலண்ட்' நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளது.
முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் இன்று முதல் 5 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6, 7, 10, 11 தேதிகளில் கட்டாய விடுமுறை கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே செப்டம்பர் 9ம் தேதி கட்டாய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, குர்கான் மற்றும் மனேசர் ஆகிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை அறிவிப்பை வெளியிட்ட அசோக் லேலண்ட் தற்போது சென்னையிலும் கட்டாய விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விற்பனை 50 சதவீதம் சரிந்தது. கடந்த மாதத்தில் 8,296 வாகனங்களை மட்டுமே விற்றிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. வர்த்தக வாகனச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம் காரணமாக கட்டாய விடுமுறையளிக்க முடிவு செய்யப்படதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.