ஒரு தாயும் மகளும், தங்களது செயினை பறித்த திருடனுடன் மல்லுக்கட்டி வண்டியிலிருந்து அவனைக் கீழே தள்ளி, தர்மஅடி வாங்கிக்கொடுத்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் தினந்தோறும் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் மக்களிடயே பீதியை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், டெல்லியின் நாங்க்லோய் பகுதியில், ஒரு தாயும் மகளும் இணைந்து, தங்களிடம் செயின் பறித்த திருடனை தர்ம அடி வாங்க வைத்துள்ளனர். இந்தக் காட்சி டெல்லி அரசு சார்பில், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் வெளிப்பட்டுள்ளது.
நாங்க்லோய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தனது மகளுடன் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். செயினை பறித்ததும் அந்தப் பெண் திருடனைப் பிடித்து இழுத்ததில் வண்டியில் இருந்து விழுந்தான்.
வண்டியை ஓட்டிவந்த மற்றொரு திருடன் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டான். கீழே விழுந்த திருடனுடன் மல்லுக்கட்டிய இரு பெண்களும் திருடனை தாக்கத் தொடங்கினர். அதற்குள் அங்கிருந்தவர்கள் அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, செயினை வாங்கி அந்தப் பெண்மணியிடம் கொடுத்துள்ளனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திருட முயன்றவர்களோடு போராடி, திருடனைப் பிடித்து உடனுக்குடன் தண்டனை வாங்கிக் கொடுத்த பெண்களுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அந்தத் திருடன் போலிஸாரால் கைது செய்யப்பட்டான். திருட முயன்ற இருவர் அப்துல் ஷம்சத், விகாஷ் ஜெயின் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற பல குற்றங்களைச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.