இந்தியா

கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸுக்கு வழங்கிய பா.ஜ.க அரசு - கே.எஸ் அழகிரி கண்டனம்

கல்விக்கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸுக்கு வழங்கிய பா.ஜ.க அரசு - கே.எஸ் அழகிரி கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்ந்தால் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ல் ஆட்சி ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வாய்ப்பு வழங்கும் வகையில் உயர்கல்விக் கடன் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிற திட்டம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 2014ம் ஆண்டில் கல்விக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 24 லட்சம் பேர். கல்விக்கடன் வழங்கப்பட்ட தொகை ரூபாய் 56 ஆயிரம் கோடி. இதில் ஐந்தில் ஒரு பங்கு பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸுக்கு வழங்கிய பா.ஜ.க அரசு - கே.எஸ் அழகிரி கண்டனம்

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் கல்விக்கடனாக ரூபாய் 17 ஆயிரம் கோடி பெற்றிருக்கின்றனர். இதில் ரூபாய் 1,875 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வாராக் கடன் என்று குறிப்பிட்டு ரூபாய் 847 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதில் ரூபாய் 381 கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலித்து பாரத ஸ்டேட் வங்கிக்கு திரும்ப வழங்க வேண்டும்.

மீதி தொகையை வசூல் கட்டணமாக ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்கிற வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி வசூலாகிற பணத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 55 சதவீதம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீதம் என்று பிரித்துக் கொள்ளப்படும்.

இத்தகைய கொடூரமான ஒரு ஒப்பந்தத்தை பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொள்வதற்கு மத்திய பா.ஜ.க அரசின் நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேசிய வங்கிகளில் கல்விகடன் பெற்ற மாணவர்கள் கடுமையான மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்தக் கடனை வசூலிக்கிற பொறுப்பை ரிலையன்ஸ் என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் வசூலிப்பதை விட ஒரு மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸுக்கு வழங்கிய பா.ஜ.க அரசு - கே.எஸ் அழகிரி கண்டனம்

வசூலிப்பதற்காக பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர். இத்தகைய அணுகுமுறையின் மூலம் மாணவர்கள் படுகிற துன்பத்திற்கு அளவே கிடையாது. இத்தகைய கொடிய அடக்குமுறையைத் தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, சமூக நோக்கத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கடன் திட்டத்தை சீர்குலைக்கிற வகையில் தனியார் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு பாரத ஸ்டேட் வங்கி செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இத்தகைய அடக்குமுறைகள் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மீது தொடர்ந்தால் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories