கேரளாவில் கடந்த 8ம் தேதியில் இருந்து பெய்துவந்த கனமழையால் 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு தொகுதி எம்.பி-யும் காங். முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை பார்வையிட வருகை புரிந்தார். வயநாடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மக்களைச் சந்தித்து நிவாரணப் பணிகள் பற்றிக் கேட்டறிந்தார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, "தனிப்பட்ட முறையில் கேரளா என் மனதுக்கு நெருக்கமான இடம். கேரளாவுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு பலமுறை கிடைத்துள்ளது. பிரதமர் பொறுப்பு எனக்கு மீண்டும் கிடைத்தவுடன் நான் முதலில் செய்தது கேரளாவின் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றதுதான்" எனப் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் காந்தி, "மோடி அவர்களே, நீங்கள் குருவாயூர் வந்து சென்றதும் கேரளா மிகப்பெரிய வெள்ளத்தை சந்தித்தது. அது பல உயிரிழப்புகளையும், பேரழிவையும் ஏற்படுத்தியது. நீங்கள் உரிய நேரத்தில் வெள்ள நிலவரத்தைப் பார்வையிட வந்திருந்தால் பாராட்டியிருப்பேன்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதுபோல் கேரளாவுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இது நியாயமற்றது" என தெரிவித்துள்ளார்.