பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் தீண்டாமைப் பாகுபாட்டை உருவாக்கும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வி நிலையங்களில் மாணவர்களை சாதி ரீதியாக பிரித்து உணவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் ராம்பூரில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடத்தில் சாதிய பாகுபாடு பெருமளவில் நிலவி வருகிறது. இந்தப் பாகுபாட்டை நீக்க பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
குறிப்பாக பட்டியலின மாணவர்கள் இந்தப் பாகுபாட்டால் ஒடுக்குமுறையைச் சந்தித்து வருகின்றனர். பட்டியலின மாணவர்கள் பள்ளியில் வழங்கப்படும் தட்டுகளில் உணவு வாங்கிக்கொண்டு தனியாக அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து உண்ணவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதாகக் கூறப்பட்டுகிறது.
பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது வீட்டில் இருந்து தட்டுகள் கொண்டு வந்து அவர்களுடன் அமர்ந்து உண்ணாமல் தனியாக உணவு உண்ணுகிறார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ பள்ளியில் வழங்கப்படும் தட்டில் யார் வேண்டுமானலும் சாப்பிடலாம். அந்த தட்டில் பட்டியலின மாணவர்களும் சாப்பிடுவதால், பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தனியாக வீட்டில் இருந்து தட்டு எடுதுது வந்து உணவு உண்ணுகிறார்கள், இதை எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை”. எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில் அம்மாவட்ட முதன்மை நீதிபதி பள்ளியை ஆய்வு செய்துவிட்டு அப்படி எந்தப் பாகுபாடும் நிகழவில்லை எனத் தெரிவித்ததோடு, விரிவான ஆய்வு பின்னர் நடத்தப்படும் என அலட்சியமாகக் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பள்ளிகளில் நடக்கும் இந்தப் பாகுபாடு வருத்ததை ஏற்படுத்துகிறது. இது கண்டனத்துக்குரியது. இதுபோல பாகுபாட்டைக் கடைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.