வங்க தேசத்தில் இருந்து வந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டதாக புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனையடுத்து, வரைவு பட்டியலில் விடுபட்ட லட்சக்கணக்கானோர் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்தனர். இருப்பினும், மக்கள் தொகையில் 3.29 கோடி பேரில் 2.89 கோடி பேர் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப்பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்ட தேசிய மக்கள் பதிவேட்டில் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளதாக பதிவேடு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
முறையான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கிட்டத்தட்ட 20 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளதால் அசாமில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.