ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ஆக.,5ம் தேதி ரத்து செய்து சட்டம் நிறைவேற்றியது மோடி அரசு.
இதனையடுத்து மக்களின் எதிர்ப்பை ஒடுக்க, ஜம்மு காஷ்மீரில் தொலை தொடர்பு சேவை, இணைய சேவைகல் முடக்கப்பட்டன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பா.ஜ.க அரசின் உத்தரவின் பேரில் ராணுவத்தின் பிடியில் இருந்தது.
நாட்டின் பிற மாநிலங்களில் இருந்த அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என எவரையும் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
நிலைமை இப்படி இருக்க, ஜம்மு காஷ்மீரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான யூசுப் தரிகாமியை சந்திப்பதற்காக ஸ்ரீநகர் சென்ற சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து, சீதாராம் யெச்சூரி, “தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரை சந்திக்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்”. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜம்மு காஷ்மீருக்கு சீதாராம் யெச்சூரி செல்ல அனுமதி அளித்தது. காஷ்மீரில் எவ்வித அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
பா.ஜ.க அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெற்ற சீதாராம் யெச்சூரி, தன் சகாக்களைக் காண இன்று காலை டெல்லியில் இருந்து விமானத்தில் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றார். அவருக்கு பல அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.