ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கிய வாலிபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மூட நம்பிக்கையின்படி மருத்துவ சிகிச்சை அளித்ததால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள கிராமம் பமரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பினோத் மற்றும் கோகுலா போத். இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்கெட் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்து இருந்ததால், இருவரும் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர். அப்போது இருவரையும் மின்னல் தாக்கியது. இந்த மின்னல் தாக்குதலில் உயிர் பிழைத்த இருவரும் பலத்தக்காயம் அடைந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் இருவர்களையும் மீட்டு அவர்களே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பினோத்தைக் குழி தோண்டி அதில் படுக்க வைத்து அவர் கழுத்து உயரத்திற்கு மாட்டு சாணத்தால் மூடி வைத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே பினோத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் பினோத்தை மீட்டு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது கோகுலா போத்துக்கு மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மூட நம்பிக்கையின் காரணமாக இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தை சர்வதேச ஊடகங்கள் விமர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.