பா.ஜ.க ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் மத்திய அரசின் பெரும்பாலான அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா இழுத்து மூடும் நிலைமைக்குச் சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அதுமட்டுமின்றி ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஏழு மாதங்களாக எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்தாததால் அந்நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 6 விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளன.
அதனால் நேற்றைய தினம் கேரள மாநிலம் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம், துபாய் புறப்பட வேண்டிய நிலையில் நான்கு மணிநேரம் தாமதம் ஆகியும் புறப்படவில்லை.
இதனால் விமானத்தில் செல்ல காத்திருந்த 300 பயணிகள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து பத்தனம்திட்டா எம்.பி.,க்கு புகார் தெரிவித்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் அவர் தொடர்பு கொண்டு பேசினார். 2 மத்திய அமைச்சர்களின் அறிவுறுத்தலின் பேரில் எரிபொருள் பிரச்னை தற்காலிகமாக தீர்க்கப்பட்டு 4 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, “இந்தியன் ஆயில் கார்ப், மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் நிறுவனம், ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருளை நிறுத்தியுள்ளதாக அறிவித்தது.
பொதுவாக ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கான கட்டணத்தை 90 நாட்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஏர் இந்தியா 200 நாட்களுக்கு மேல் ஆகியும் எரிபொருளுக்கான கட்டணத்தை செலுத்தவில்லை.
அதுமட்டுமின்றி எண்ணெய் நிறுவங்களுக்கு தரவேண்டிய தொகை என்பது 4500 கோடி ரூபாய் . ஆனால் ஏர் இந்தியா கொடுக்க முன்வந்த தொகை என்பது வெறும் 60 கோடி. அதனை எண்ணெய் நிறுவனங்கள் பெற மறுத்துவிட்டனர். அதனால் தற்போது மேல் குறிப்பிட்ட 6 விமான தளங்களில் விமான சேவையை நிறுத்தியுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா நிறுவனம் சிக்கியுள்ளதால், விரைவில் அது இழுத்து மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கியுள்ள நிலையில், இந்த செய்தி முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.