கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் சமயத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, உபரி நிதியை ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். சராசரியாக மற்ற நாடுகளில் 14 சதவிகிதமாக இருக்கும் கையிருப்பு ரிசர்வ் வங்கியில் 28% ஆக வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின் போது வலியுறுத்தியது. பா.ஜ.க அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணியாமல் அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தது பெருமளவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பிறகு, உபரி நிதியை பிரித்து வழங்குவது தொடர்பாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த ஆண்டு டிசம்பரில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உபரி நிதி வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கியிடம் கடந்த 14ம் தேதியன்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இதன் மீதான விவாதம் நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற போது, இந்த நிதி ஆண்டிலேயே உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன் படி மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் வழங்குவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில், “ரிசர்வ் வங்கியின் லாபத்தில் 99 சதவிகிதத்தை மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் கையகப்படுத்தி வருகிறது. தற்போது 1.76 லட்சம் கோடியையும் வாங்கிவிட்டது.
நாட்டின் நவரத்தினமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் படு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஈவுத்தொகை கைப்பற்றல் மற்றும் நிதிச் சுமை போன்ற தாக்குதலால் அவை கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாட்டால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன” என சீதாராம் யெச்சூரி மத்திய அரசை சாடியுள்ளார்.